தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடந்த தேர்த்திருவிழாவில் மின்கம்பி உரசியதில் உயிரிழந்த 11 பேரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மோட்சதீபம் ஏற்றப்பட்டது.
இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் மற்றும் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் ஸ்ரீ கார்யம் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தது..
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடந்த தேர்த்திருவிழாவின் போது உயர் அழுத்த மின்பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட வார்த்தைகள் இல்லை.இந்த விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் கே.பிரதாப், எம்.மோகன்,ஏ.அன்பழகன் மற்றும் இவரது மகன் ராகவன் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களது ஆத்மா சாந்தியடைவதற்காக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாணைப்படி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
இக்கோர விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிகிறோம்.அவர்கள் விரைந்து குணமடையவும் பிரார்த்திப்பதாக ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.