ஸ்தூல, சூட்சும, காரண மயமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள்!

ஆடியில் தேவி தரிசனம் – 3

Source – https://kamadenu.hindutamil.in/divine/kanchipuram-kamakshi-amman-temple-sakthi-peetam-aadi-festival

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்

இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் காமகோடி பீடமாக விளங்குவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில். காம என்றால் அன்பு அல்லது கருணை. அட்சி என்றால் பார்வை. கருணையையே பார்வையாகக் கொண்டவள் என்பதால் அவள் காமாட்சி எனப்படுகிறாள்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளம்

பிரம்மாவின் வரங்களால் வேண்டிய சக்திகளைப் பெற்ற பந்தகாசுரன், கயிலை மலையையும் ஆட்டுவித்தான். அதே சமயத்தில் கிளி வடிவம் தாங்கி செண்பகவனத்தில் சக்திதேவி தவம் மேற்கொண்டிருந்தாள். தேவர்களின் வேண்டுகோளின்படி பந்தகாசுரனை வதம் செய்த தேவி, 16 கரங்களுடன் காட்சி தந்தாள். உக்கிர ஸ்வரூபத்தை தணிக்குமாறு அன்னையை, தேவர்கள் வேண்டிக்கொண்டனர்.

அதனையேற்று, ஸ்வயாம்புக மன்வந்திரத்தில், கிருத யுகத்தில், ஸ்ரீமுக வருஷம், பங்குனி மாதம், கிருஷ்ண பட்சத்தில், பிரதமை திதியும், பூர நட்சத்திரமும் கூடிய வெள்ளிக்கிழமை நாளில் காமாட்சி அன்னையாக தேவி காட்சி தந்தாள். அப்போது போலவே, 24 தூண்கள் கொண்ட காயத்ரி மண்டபத்தின் நடுவே, தென்கிழக்கு திசை நோக்கி, நான்கு கரங்களில் பாசம், அங்குசம், மலர் மற்றும் கிளி, கரும்புவில் ஆகியவற்றை ஏந்தியபடி, பத்மாசன திருக்கோலத்தில் அன்னை இப்போதும் வீற்றிருக்கிறாள். கிளி வடிவில் அன்னை தவமிருந்து, காமாட்சியாக காட்சி கொடுத்த செண்பகவனம்தான் இன்றைய காஞ்சிபுரம்.

இக்கோயிலில் கண்ணுக்குப் புலப்படும் ஸ்தூல வடிவமாக காமகோடி காமாட்சியாக மூலஸ்தானத்தில் அம்பாளை தரிசிக்கிறோம். அடுத்து கண்ணுக்குத் தென்படாத சூட்சும வடிவமாக அஞ்சன காமாட்சியாக, மூலமூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில், வடக்கு நோக்கியவாறு வீற்றிருக்கிறாள். அடுத்து காரண வடிவமாக ஸ்ரீசக்கரத்தில் ஸ்ரீசக்கர நாயகியாக அன்னை இதே மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறாள். இந்த ஸ்ரீசக்கரம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதாகும். காமாட்சி அன்னைக்கு திரிபுரசுந்தரி, ஸ்ரீ சக்கர நாயகி, காமேஸ்வரி, மகாதேவி, லலிதாம்பிகை என பல்வேறு பெயர்கள் உள்ளன.

காமாட்சி அன்னை

காமாட்சி அன்னை 

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரரைப் போல பல கோயில்கள் சிவபெருமானுக்கு உள்ளன. இவை அத்தனையிலும் அன்னை காமாட்சியே மூலவர் அம்பாளாக கருதப்படுகிறாள். இதனால், காஞ்சிபுரம் சிவன் கோயில்களில் அம்பாளுக்கு என தனி சன்னதி கிடையாது. ஆனாலும் உற்சவர் அம்பாள் விக்ரங்கள் தனித்தனியாக உள்ளன.

சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவுள்ள காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள், தெப்பக்குளமும், நூறு கால் மண்டபமும் அமைந்துள்ளன. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீகள்வர் பெருமாள் கோயில் காமாட்சி அம்மன் கோயில் பிரகாரத்தில் அமைந்திருக்கிறது. காமாட்சி அம்மன் மூலஸ்தான விமானம் தங்கத்தகடுகளால் வேயப்பட்டதாகும்.

காமாட்சி அம்பாளுக்கு மாசி உற்சவத்தில் பிரம்மோற்சவம், ஆடி வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி, ஐப்பசி பூசம், வைகாசி வசந்த உற்சவம் ஆகியவை முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்